பெருந்தோட்டப் குடியிருப்புகளில் வாழ்கின்ற குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களைக் அறிவிக்கும் நேற்றைய வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பந்துல குணவர்தன இதனை தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஒரே வீட்டில் வாழும் உப குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவுகளை வழங்கும் தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெருந்தோட்டத் துறையில் உள்ள தோட்டங்களில் தனி வீடுகள் இல்லாதிருப்பதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் தனிக் குடும்பங்கள் கூட்டாக ஒரே லயின் வீடுகளில் வசிக்கின்றனர்.
தற்போதைய நடைமுறைக்கமைய, குறித்த சந்தர்ப்பத்தில் வேறுவேறான குடும்ப எண்ணிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல், லயின் அறைகளில் வாழ்கின்ற அனைத்து நபர்களும் ஒரு குடும்ப அலகாக கருதப்படுகின்றனர்.
இதில் பல குடும்பங்களுக்கு இது பாதகமாக அமைந்துள்து. எனவே, அஸ்வெசும முன்மொழிவுத் திட்டத்துக்கு தகைமைகளை நிர்ணயிக்கும் போது லயன் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு செயலாற்றுமாறு நலன்புரி நன்மைகள் சபைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.