ஜப்பானுடனான வெற்றிகரமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இடைநிறுத்தப்பட்ட 13 திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கடும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், ஜப்பான், சிங்கப்பூர், ருமேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கான தனது அண்மைய விஜயங்கள் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்ததுடன், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதற்கு பங்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விஜயங்களின் மூலம் இலங்கையில் தடைப்பட்ட ஜப்பானிய திட்டங்களை மீள ஆரம்பிப்பது உட்பட பல நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
இதேவேளை சிங்கப்பூரிற்கான விஜயத்தின் போது முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும், அதே நேரத்தில் ருமேனியாவுடனான பேச்சுவார்த்தைகள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாக அமைந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.