அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாததால், பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவினால் இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டடிருந்தது. அதன்படி, குறித்த மனுவைப் பரிசீலிக்கப் பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்றைய தினம் கூடி இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது
மேலும் சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவிற்கு அபராத கட்டணமாக 05 இலட்சம் ரூபாவை ஜூலை 31ம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது
இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு தொழிலதிபர் சி.டி. லெனாவா தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை அண்மையில் உயர் நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.