உயர்தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11ம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்தொகையை ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மாவட்டச் செயலாளர்கள் தலைமையில், அனைத்து வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதிபர்களின் ஒருங்கிணைப்புடன், புலமைப்பரிசில்கள் வழங்குதல் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் திகதிகள், நேரம் மற்றும் இடங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட புலமைப்பரிசில் வென்றவர்களின் பட்டியல் என்பன அடுத்த சில நாட்களில் ஜனாதிபதியினால் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சாதாரண தரம் கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கு தெரிவான மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
உயர்தரத்தில் ஒவ்வொரு கல்வி வலயத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தெரிவு செய்து மாதம் ஒன்றுக்கு ரூ.6000/- வீதம் 24 மாதங்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.
இதன்படி, மாவட்ட மட்டத்தில் வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ள ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி நிதியம் கேட்டுக்கொள்கிறது.