Home Business சுற்றுலாத்துறை பற்றி அறிய ஜனாதிபதி காலிக்கு விஜயம் – வர்த்தக சமூகத்தின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

சுற்றுலாத்துறை பற்றி அறிய ஜனாதிபதி காலிக்கு விஜயம் – வர்த்தக சமூகத்தின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தங்காலை மற்றும் காலி பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, மீள் எழுச்சி பெற்ற சுற்றுலாத்துறை பற்றி அறிந்து கொண்டார்.

 

இதேவேளை சுற்றுலாத்துறை தொடர்பான வர்த்தக சமூகம் முன்வைக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கையில் சுற்றுலாத்துறையின் புதிய எழுச்சியுடன் சுற்றுலா வலயங்கள் தொடர்பான வசதிகளை விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் இணைந்துகொண்டார்.

கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் சுற்றுலாத்துறை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அரசாங்கத்தின் புதிய திட்டங்களால், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,489,000 ஆகும், இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பு அதிகரிப்பாகும்.

இந்த நாட்டிற்கு 2017 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் அந்த இலக்கை கடக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது மற்றும் அடுத்த ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

சாதாரண சுற்றுலாப் பயணிகளுக்கு மேலதிகமாக, நாளொன்றுக்கு 500 டொலர்களை செலவழிக்கும் உயர்தர சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேவையான உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் புதிய சுற்றுலா ஊக்குவிப்பு திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வேலைத்திட்டம் தொடர்பில் வர்த்தக சமூகத்தினருடன் ஜனாதிபதி யோசனைகளை பரிமாறிக்கொண்டதுடன், அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்துடன் தமது வர்த்தக நடவடிக்கைகள் மாற்றமடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சினிமோதர, திக்வெல்ல, நில்வெல்ல, ஹிரிகட்டிய, வெலிகம மற்றும் ஹபராதுவ பிரதேசங்களில் உள்ள பல சுற்றுலா ஹோட்டல்களுக்கும், தென் கரையோரத்தில் அமைந்துள்ள வெலிகம சர்ப் பாடசாலைக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.

உனவடுன சுற்றுலா வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக அவர்களுடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

இதேவேளை, வார இறுதி விடுமுறையில் தங்காலை மற்றும் காலி கடற்கரைக்கு வந்திருந்த உள்ளூர் சுற்றுலா பயணிகளின் தகவல்களை கேட்டறிய மறக்காத ஜனாதிபதி, வீதியோரம் கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

Previous articleபொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கத் தடையுத்தரவு
Next articleநாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி வௌியிட்டுள்ள அறிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here