தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பதிவிடுபவர்கள் மீது விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தொழிலாளர் ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் புதிய சட்ட முறைமை உருவாக்கப்படவில்லை எனவும் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
புதிய தொழிலாளர் சட்ட அமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொழிலாளர் உரிமைகளில் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்றும் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விளம்பரங்களினால் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் தொழிலாளர் திணைக்களத்தின் மீது அவநம்பிக்கையையும் வெறுப்பையும் உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறு பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தொழிலாளர் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.