மயமாக்கப்படும்எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் 3000 உயர்தர பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை டிஜிட்டல் மயமாக்கலுக்கு தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணம் இந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் நேற்று (05) கலந்து கொண்டு அமைச்சர் தெரிவித்தார்.
இதன்மூலம் புதிய தொழில்நுட்பத்துடன் நேரடியாக இணைவதன் மூலம் பிள்ளைகள் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டின் சகல சிறார்களுக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதே கல்வி அமைச்சின் நோக்கமாகும் என்றும் அதன் ஒரு படியாக இந்த டிஜிட்டல் மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான அனைத்து பாடசாலைகளுக்கும் ஸ்மார்ட் ஊடாடும் பலகைகள் ( (Smart Interactive Board)வழங்கப்படும் எனவும், அதேவேளை ஒவ்வொரு கல்வி வலயங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கணினி வள நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குழந்தைகளின் நலனுக்காக நாட்டின் கல்வி முறையை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும், எதிர்வரும் சில வாரங்களில் நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் விஜயம் செய்து அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ பேராசிரியர் சிவ சிவநாதன், பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்து வித்தியாலய அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.