கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஒருபோதும் கைவிடப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிபுணத்துவ மன்றத்துக்காக நடைபெற்ற “ஆஸ்க் மி – எனிதிங்க்” விசேட நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் இலங்கையர்கள் தொடர்பான கேள்விக்கும் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.
“தொழிலாளர் துறையிலும் டிஜிட்டல் மயமாக்கல் தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு துறையிலும் அதைச் செய்யப் போகிறோம். இரண்டாவதாக, நாம் யாரும் வௌிநாடு செல்வதை நிறுத்தவில்லை. குறிப்பாக, என் கருத்துப்படி, செல்ல விரும்பும் இளைஞர்களுக்கு இடமளிக்க வேண்டும். வௌிநாடுகளுக்கு செல்லும் குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நான் ஏற்கனவே கிழக்கு ஆசிய நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளேன், எங்கள் திட்டத்தின் கீழ் நாங்கள் 50,000 இளைஞர்களுக்கு ஒரு தொழிற்கல்வி பாடத்தைத் தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்குச் செல்ல ஊக்குவிக்கவுள்ளோம்” எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.