அடுத்த வருடம் முதல் 100,000 புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் இதுபோன்ற புதிய வேலை வாய்ப்புகளை வழங்க முடியுமா என எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட “இயலும் ஸ்ரீலங்கா” என்ற ஐந்தாண்டு வேலைத்திட்டத்தின் கொள்கை அறிக்கைகளில் 2025ல் 100,000 வேலை வாய்ப்புகளை எவ்வாறு வழங்குவது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு
சர்வதேச உதவியில் இயங்கும் திட்டங்கள்
பொருளாதார வீழ்ச்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டு முதல் அவற்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலைகள்
சுற்றுலாத்துறை, உற்பத்தி கைத்தொழில் உள்ளிட்ட தனியார் துறையுடன் இணைந்து புதிய வேலைவாய்ப்புத் திட்டம் தயாரிக்கப்படும் என ஜனாதிபதி சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துறைகளில் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு 35,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படும் எனவும், பயிற்சியின் பின்னர் அவர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை உருவாக்குதல்
சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் சலுகைகளால், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி, வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்
விவசாய நவீனமயமாக்கல்
2025 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை விவசாய நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகவும் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
50,000 வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்
பயிற்சியுடன் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க நேற்று (01) புத்தளத்தில் தெரிவித்ததுடன், இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க,
“வேலைவாய்ப்பை வழங்குவதில் முதல் கட்டமாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அரசு வேலைகள், தனியார் துறை மற்றும் சுயதொழில். மேலும் 50,000 பேருக்கு பணம் கொடுக்கப்பட்டு அவர்கள் விரும்பும் பாடத்தில் பயிற்சி பெற்று வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. முதலில் விவசாயத்தை நவீனப்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.