ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) காலை அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க புனித தலத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி முதலில் வண, பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
அநுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க லங்காராம விகாரையின் விகாராதிபதி வண, ரலபனாவே தம்மஜோதி நாயக்க தேரர் விசேட அனுசாசனை உரை நிகழ்த்தியதுடன், இந்த நாட்டின் புத்த சாசனத்தைப் பாதுகாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிகள், நிச்சயமாக அவரின் எதிர்கால வெற்றிகளுக்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசிக்க வருகை தந்திருந்த மக்கள் மத்தியில் சென்ற ஜனாதிபதி, அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம்.சந்திரசேன, சம்பத் அத்துகோரள எச்.சி.முத்துகுமாரன, வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, பீ.ஹெரிசன், முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.