ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியான எதிர்வரும் 15ஆம் திகதி (வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
சுமார் 1500 பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்தப் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், தேர்தல்கள் செயலகத்தின் பாதுகாப்பிற்காக அப்பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் விமானப் படையின் விசேட ஸ்னைபர் படையை பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்றைய தினம் தேர்தல்கள் செயலகத்தின் பாதுகாப்பிற்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் அலுவலகத்திற்கு வரும் வாகனங்களுக்கு ஏ, பி, சி என மூன்று உரிமங்கள் வழங்கப்படவுள்ளது அதனடிப்படையில் வேட்பாளர்களுக்கு ‘ஏ’ உரிமம் வழங்கப்படும் அதன் மூலம் வேட்பாளரின் வாகனத்தை மாத்திரம் தேர்தல்கள் செயலகத்திற்குள் கொண்டுவர முடியும்.
வேட்பு மனுவில் கையொப்பமிடும் மேலும் இருவர் மட்டுமே வேட்பாளருடன் தேர்தல் அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்படுவர்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக வேட்பாளர்கள் குறித்த நேரத்தில் தேர்தல்கள் செயலகத்திற்கு செல்ல முடியாவிட்டால் அவர்களுக்கு உதவுவதற்காக தனி பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்கள் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர்கள், இராணுவ பிரதானிகள் மற்றும் ஏனைய பாதுகாப்பு திணைக்கள தலைவர்களுக்கு இடையில் கடந்த 16 ஆம் திகதி ராஜகிரிய தேர்தல்கள் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.