6வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்த தாய்லாந்து பிரதமரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றார்.
இராணுவ வணக்கங்கள் மற்றும் 19 சுற்றுகள் மரியாதையுடன் இந்த வரவேற்பு பெருமைமிக்க முறையில் இடம்பெற்றது. இரு நாடுகளின் பிரதிநிதிகளை அறிமுகப்படுத்திய பின்னர், இரு தலைவர்களும் நட்பு ரீதியாக உரையாடினர்.
பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், தேரவாத பௌத்த உறவுகள் மற்றும் வலுவான கலாசார உறவுகளின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் வரலாற்று நட்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவு கூர்ந்தார்.
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய உறவை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த உறவுகளை நிலையான உறவுகளாக மாற்றுவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
தென்கிழக்காசியாவுடனான உறவுகளை விரிவுபடுத்தி பிராந்தியத்தில் வலுவான பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்தும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.
இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒரு தனித்துவமான சந்தர்ப்பம் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆசியான் பிராந்தியத்தில் தனது ஏற்றுமதிச் சந்தையை வலுப்படுத்துவதே இலங்கையின் நோக்கமாகும் என்றும், இலங்கையில் பாரிய முதலீடுகளுக்கு பரந்த வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் (RCEP) இணைவதற்கு இலங்கை தற்போது விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த நடவடிக்கைகளில் தாய்லாந்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வர்த்தகம் மற்றும் திட்டமிடல் வாய்ப்புகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் கவனம் செலுத்தப்படாத புதிய பகுதிகள் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவுபடுத்தினார்.
தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் பூம்தம் வெச்சயச்சாய், வெளிவிவகார அமைச்சர் ஜக்கபொங் சங்மானி, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வதுடன், இலங்கையின் பிரதிநிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவும் கலந்துகொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.