இந்தியர்கள் விடுமுறையைக் கழிக்க விரும்பினால், அதற்கு இலங்கையே சிறந்த இடமாகும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள இந்திய முகாமைத்துவ நிறுவனத்தில் நடந்த விரிவுரையில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், உலக அரங்கில் இந்தியாவின் பங்கு குறித்து மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
“நான் ஒரு அறிவுரை கூறுகிறேன். அடுத்த முறை விடுமுறையில் எங்காவது போகும்போது, இலங்கைக்குப் போங்கள். இலங்கையர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். நீங்கள் விடுமுறைக்கு செல்கிறீர்கள் என்றால், இலங்கையை விட சிறந்த இடம் எதுவுமில்லை. இலங்கையர்கள் எங்களைப் பற்றி உயர்வாகப் பேசுகிறார்கள். நீங்கள் அந்த விடயங்களைக் கேட்டால், ஒரு இந்தியராக நீங்கள் பெருமைப்படுவீர்கள்” என்று டாக்டர் எஸ். ஜெய்சங்கர் விளக்கவுரையாற்றினார்.
இலங்கை இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடு என்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எப்போதும் வலுவான நட்புறவு இருக்க வேண்டும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது இந்தியா இலங்கைக்கு பலமாக இருந்தமை குறித்தும், உலகமே புரண்டபோது இந்தியா முன் வந்து இலங்கைக்கு கடன் வழங்கியது குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சர் நீண்ட விளக்கமளித்தார்.