யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 2010ஆம் ஆண்டு நான் கைதுசெய்யப்பட்டேன். அதன்போது, தயா ரத்நாயக்க என்பவரே எனக்கு எதிராக போலிச் சாட்சிகளை உருவாக்கி எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரித்தார். ராஜபக்ஷக்களுக்கு சார்பாக செயற்பட்ட இவர், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் இறுதியில் எங்களின் கட்சியிலேயே இணைந்துவிட்டார். தயா ரத்நாயக்கவின் நியமனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அச்சத்துடன் கட்சி செயற்பாடுகளை என்னால் முன்னெடுக்க முடியாது. அவரை கட்சியிலிருந்து நீக்காவிட்டால் இறுதியில் ஐக்கிய மக்கள் சக்தியே நெருக்கடியை சந்திக்கும்” என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அவரின் பிரத்தியேக கட்சி அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தி என்பது பல்வேறு அர்ப்பணிப்புகளுடன் கட்டியெழுப்பப்பட்ட கட்சியாகும். அது ஒருவருக்கு அல்லது இருவருக்கோ உரித்தான கட்சி அல்ல. கடந்த தேர்தலில் வெற்றிகரமான முடிவுகளை பெறுவதற்கு பெரும் அர்ப்பணிப்புகளை செய்தோம். நேரம், உழைப்பு, வளம் என்பவற்றை பெருமளவு செலவு செய்துள்ளோம். அதனால், கட்சி வீழ்ச்சியை சந்திக்க இடமளிக்க முடியாது.
ஒருசிலரின் எதேச்சையான தீர்மானங் களினால் கட்சி வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கவும் முடியாது. தயா ரத்நாயக்க என்பவர் நிச்சயமாக எங்களின் கட்சிக்கு உரித்தானவர் இல்லை. அவர் நான் இருக்கும் இடத்துக்கு வருகிறார் என்றால் ஒருவேளை அவருக்கு தலையில் சிக்கல் இருக்கவேண்டும். அவரின் வெட்கமற்ற தன்மையும் இதில் தெரிகிறது.
நான் இருக்கும் இடத்தில் அவர் அரசியல் செய்ய எதிர்பார்க்கிறார் என்றால், அவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் செயற்பட்ட விதம் தொடர்பில் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் என்னை கைதுசெய்தார்கள். அதன்போது இவரே, மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காட்டு நீதியை கொண்ட சட்ட ஒழுங்குகளை முன்னெடுத்தார்.
என்னை யுத்தக் குற்ற நீதிமன்றத்தின் முன் நிறுத்தியபோது அங்கிருந்த நீதிபதிகள் என்னை விட கனிஷ்ட பதவிகளை வகித்தவர்களாக இருந்தார்கள். எனது வழக்கில் தயா ரத்நாயக்கவே எனக்கு எதிராக போலிச் சாட்சிகளை உருவாக்கி, குற்றப்பத்திரிகை தயாரித்தார்.
எனக்கு எதிராக போலிச் சாட்சிகளை உருவாக்கியமையின் காரணமாக தயா ரத்நாயக்க 25ஆவது இடத்திலிருந்து இராணுவத்தின் இரண்டாவது முக்கிய அதிகாரியாக மாற்றப்பட்டார். அன்றிலிருந்து ராஜபக்ஷக்களுக்கு சார்பாக செயற்பட்டு, என்னை கைது செய்து இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய பதவியிலிருந்து செல்லும்போது எப்படியோ இராணுவ தளபதி பதவியையும் பெற்றுக்கொண்டார்.
நான் இருந்த யுத்த காலப்பகுதியில் அவரின் வினைத்திறனற்ற செயற்பாடுகளினால் அவரை வடக்கு பிரதேசங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு பொறுப்பான அதிகாரியாக நியமித்திருந்தேன். அவர் இராணுவத் தளபதியாக இருந்த காலப்பகுதியில் அவரினால் பல்வேறு இன்னல்களை சந்தித்தவர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இருக்கிறார்கள். தொழில்வாய்ப்புகளையும் இழந்துள்ளார்கள்.
இவ்வாறானவொரு நபரை நான் இருக்கும் இடத்தில் பொறுப்பேற்றது எனக்கு பெரும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற நபர்களுடன் ஒன்றாக செயலாற்ற முடியாது, அமர முடியாது, அரசியல் செய்ய முடியாது என்ற அச்சத்தில் இருக்கிறேன். இதுதொடர்பில் கட்சி தலைவருக்கும் செயலாளருக்கும் அறிவித்திருக்கிறேன். இதுபோன்ற நபருக்கு கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொடுக்க முடியாது என்றும் அறிவித்திருக்கிறேன்.
கட்சி என்றால் கொள்கை இருக்கவேண்டும். கொள்கையின் பிரகாரம் கடமையாற்றக் கூடியவர்களுடனேயே பணியாற்ற முடியும். இவரின் நியமனத்தை ஏற்க முடியாது. அதற்காக கட்சியைக் கைவிட மாட்டோம். கட்சியில் எங்களுக்கு உரிமை இருக்கிறது. தயா ரத்நாயக்கவின் வகிபாகத்தை சகலரும் அறிந்துகொள்ளவேண்டும். கோட்டா பதவியிலிருந்து சென்றதன் பின்னர் இவர் இறுதியில் எங்களின் கட்சியில் நுழைந்திருக்கிறார். இதனால் நாங்களே சிக்கலுக்குள்ளாகுவோம். எங்களின் ஒற்றுமை சீர்குலையும். கட்சியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்றார்.