உலகின் 05 பெரிய பெற்றோலிய நிறுவனங்களுள் ஒன்றான சீனாவின் Sinopec நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sinopec எரிபொருள் எண்ணெய், இலங்கை தனியார் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகியன இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டதுடன், பெற்றோலியம் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கான நீண்ட கால ஒப்பந்தம் தொடர்பாக மேலும் இரண்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட விசேட குழு சீன Sinopec நிறுவனத்துடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் பிரகாரம் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.