ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய புவிசார் அரசியலுக்கும் பசுபிக் பிராந்திய அரசியலுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அந்த வேறுபாடுகளை நாம் உணர்ந்து சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு நாம் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் இரண்டு தசாப்தங்களில் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையை முன்னேற்றுவதற்கு அணிசேராக் கொள்கை, பஞ்சசீல மற்றும் ஆசியக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஆசியாவிலேயே முதலாவதாக நிர்மாணிக்கப்பட்ட மாநாட்டு மண்டபமான கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதிமேற் கண்டவாறு தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 25 ரூபா பெறுமதியான நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது.
50 வருட காலப்பகுதியில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு மற்றும் கண்காட்சித் துறைகளில் அதிக வருமானத்தை வழங்கிய நிறுவனங்களுக்கும், கண்காட்சித் துறைக்கான புத்தக வெளியீட்டாளர் சங்கம் மற்றும் நிகழ்வுத் துறைக்கான பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதியிடமிருந்து நினைவு பரிசுகளை பெற்றுக்கொண்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:
அணிசேரா கொள்கை, பஞ்சசீலம், ஆசியக் கொள்கை ஆகியவற்றைப் பயன்படுத்தி இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். அந்த பொதுவான உண்மைகள் இன்றும் செல்லுபடியாகும். இந்த பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் ஆசியாவின் ஒருமைப்பாடு தொடர்பில் சுட்டிக்காட்டக்கூடிய சிறந்த உதாரணம் என்றே கூற வேண்டும்.
ஆசியாவின் ஒற்றுமையை நாம் தொடர்ந்து பேண வேண்டும் என்பதையும் நான் கூற விரும்புகிறேன். உலக வல்லரசுப் போராட்டத்தில் இந்தியப் பெருங்கடலின் நாடுகளால் மட்டுமே ஒற்றுமையை இழக்க முடியவில்லை என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
உலக வல்லரசுகளாக மாற வேண்டும் என்ற இலட்சியத்துடன் சில குழுக்கள் பசிபிக் பெருங்கடல் நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையை குலைத்து அவர்களை போர் நிலைக்கு இழுத்துள்ளன. அது இந்தியப் பெருங்கடலை அடைவதைத் தடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆசியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு இலங்கை எந்த வகையிலும் துணைபோகாது என்பதையும் வலியுறுத்துகிறேன்.
ஆபிரிக்க பிராந்தியத்திலும் ஏனைய நாடுகளிலும் இலங்கை இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கடற்கொள்ளையர்களிடம் இருந்து அந்நாடுகளை விடுவிக்கவும் நமது ராணுவம் விரிவான பங்களிப்பை அளித்து வருகிறது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான பந்துல குணவர்தன, விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Shanghong Qi Zenhong, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன் பத்திரன, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பணிப்பாளர் சுனில் திசாநாயக்க மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.