Site icon Newshub Tamil

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அடுத்த ஜந்து ஆண்டுகளில் தீர்க்கப்படும் – ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் மாகாண சபையை செயற்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்” என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அடுத்த ஜந்து ஆண்டுகளில் தீர்க்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற இயலும் ஸ்ரீலங்கா என்ற வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்த வேளையிலேயே நாட்டை ஏற்றேன். 2022 அத்தியாவசிய பொருட்கள் ஒன்றும் எமக்கு கிடைக்கவில்லை. மின்சாரமும் இருக்கவில்லை.
கஷ்டங்களுடன் வாழ்ந்தோம். பெண்கள் அதனை மறந்திருக்க வாய்ப்பில்லை.

அன்று இப்போதிருக்கும் முன்னேற்றம் கிட்டும் என்று யாரும் நினைக்கவில்லை. அனுரவும் சஜித்தும் அன்று இருக்கவில்லை. ஆனால் நான் ஏற்றதால் நாட்டில் தட்டுப்பாடுகள் நீங்கி நல்ல நிலைமை காணப்படுகிறது.
அதனால் மக்கள் சுமூகமாக வாழ முடிந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே மக்கள் மீது சில சுமைகளை சுமத்த வேண்டியிருந்தது.
சர்வதேச நாணய நிதியம் எமது கடன் சுமை அதிகரித்தால் நாட்டின் நெருக்கடி மேலும் உக்கிரமடையுமென அறிவுறுத்தியது.

அடுத்த ஐந்து வருடங்களில் சுமையை மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். மாகாண சபையை செயற்படுத்தி இப்பகுதி மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்.
இன்றைய சிறுவர்களுக்கு 25 வயதாகும்போது அவர்கள் முன்னேற்றமடைந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

சஜித்தினாலும், அநுரவினாலும் அதனை செய்ய முடியாது. வாய்ப் பேச்சினால் எவர் வேண்டுமானாலும் சாதிக்கலாம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியாது. மாறாக வீழ்த்தவே முடியும்.

சஜித்தினாலும், அநுரவினாலும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கட்டியெழுப்ப முடியாது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version