Site icon Newshub Tamil

அநுர, சஜித் முதலில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் – ஜனாதிபதி

வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி மக்களிடமும் அநுரகுமார மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் சங்கிலியன் பூங்காவில் ​நேற்று நடைபெற்ற இயலும் ஶ்ரீலங்கா வெற்றிப் பேரணியில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும் என்பதுடன் மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

விவசாயத் துறையைப் பலப்படுத்தி வரும் நிலையில், வடக்கில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கில் காங்கேசன்துறை, பூனகரி,மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்கவிருப்பதுடன் வடக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் வடக்கில் டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

”ஜனாதிபதித் தேர்தலை ந டத்த முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் நம்பியிருக்கவில்லை.

அனைத்திற்கும் வரிசை இருந்தது. நாட்டில் ஸ்தீரத்தன்மையை பாதுகாத்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தியுள்ளேன்.

அந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடியதாக உள்ளது. இயலும் ஶ்ரீலங்கா எண்ணக் கருவை முன்னெடுத்து வருகிறேன்.

சஜித்தும் அநுரவும் பொறுப்புக்களை ஏற்க முன்வரவில்லை. அவர்கள் இருந்தால் தேர்தலை நடத்தியிருக்க முடியுமா? கூட்டங்களில் பேச முன்னர் அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இன்னும் பிரச்சினைகளும், சிரமங்களும் உள்ளன. ஆனால் எல்லாவற்றிற்கும் எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பைப் பாதூக்ககவே நான் போட்டியிடுகிறேன் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்

 

Exit mobile version