Site icon Newshub Tamil

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரங்கள்

மேல் மாகாணத்தை சுமார் 50 இலட்சம் மக்கள் வாழும் பெரிய நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கிராமங்கள், நகரங்கள் மற்றும் மலையகத்தை உள்ளடக்கிய வகையில் மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குவதற்கு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எந்தவொரு அரசாங்கத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படாத இந்த புரட்சிகரமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று (17) பிற்பகல் நடைபெற்ற கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 50,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் “ரன்தொர உறுமய” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, 2024 வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் பேருக்கு காணி உரிமை வழங்கும் உறுமய வேலைத்திட்டமும், கொழும்பு.அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இரண்டரை இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்த வீடுகளின் முழு உரிமையை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் முதற்கட்டமாக கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 50,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு முழு உரிமையுள்ள உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 937 வீடுகளும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் 180 வீடுகளும் உள்ளடங்கலாக 1117 உறுதிப் பத்திரங்கள் இன்று வழங்கப்பட்டன.

இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மிஹிந்து செத்புர, சிறிசர உயன, மெட்ரோ வீட்டுத் தொகுதிகள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 31 அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு இந்த “ரன்தொர உறுமய” உரிமைப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

Exit mobile version