Site icon Newshub Tamil

முதலாளிமார் சம்மேளனம் உறுதியளித்த 1350 ரூபா சம்பளத்தை ஏற்க முடியாது – செந்தில் தொண்டமான்

1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை வழங்க முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக மறுப்பை வெளியிட்டு வருகிற நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் 1700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி பெருந்தோட்டங்கள் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க்காது தான்தோன்றித்தனமாக கம்பனிகள் செயல்படுவதுடன், 1200 அடிப்படை சம்பளமும், 80 வீதம் பணியில் ஈடுபட்டால் 150 ரூபா கொடுப்பனவுடன் 1350 ரூபாவை மாத்திரமே வழங்க முடியும் என கூறுகின்றன.

இதேவேளை கம்பனிகளின் இந்தப் போக்கை இ.தொ.கா வன்மையாக கண்டிக்கிறது எனவும், கம்பனிகள் தொழில் அமைச்சுக்கு சமர்பித்த முன்மொழிவை இ.தொ.கா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிலை தொடருமானால் பெருந்தோட்டங்கள் முழுவதும் 1700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி கடுமையான போராட்டங்களை தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version