நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், ‘தமிழக வெற்றி கழகம்’ என அதனை பதிவு செய்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற நடிகர் விஜயின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதனை கட்சியாக உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளார்.
இதனை நடிகர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அரசியலில் திரைப்பட நடிகர்கள் பல ஆண்டுகாலமாக கோலோச்சி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த், கமல் ஹாசன் போன்ற தலைவர்களைத் தொடர்ந்து, சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோரும் தனித்தனியாக அரசியல் கட்சிகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின்னர் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்குவது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச நடிகர் விஜய்க்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.