Site icon Newshub Tamil

China Harbour இடமிருந்து துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர் முதலீடு

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் திரு.அலி சப்ரி தெரிவித்தார். இந்த நாட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பிக்க சீனாவின் சினோபாக் நிறுவனம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வங்கி முறை வீழ்ச்சியடையும் என சிலர் காத்திருப்பினும், நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஸ்திரமான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த போது, ​​சீன நிதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சீன எக்ஸிம் வங்கியின் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும், இந்நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தயார் என சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி சீனாவில் வெளியாகும் ப்ளூம் பேர்ட் பத்திரிகையில் இலங்கை கடுமையான பொருளாதார சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு நல்லதொரு பொருளாதார நிலைமையை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version