Site icon Newshub Tamil

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை அரசாங்கம் வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சகல பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்விசார் ஊழியர் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து பல்கலைக்கழக அமைப்பை பேணுவதும் இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.

பல்கலைக்கழக அமைப்பில் தேவையான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வருடாந்தம் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள கல்வி வசதிகள் போதுமானதாக இல்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதுள்ள நிதி ஒதுக்கீட்டு வரம்புகளை நிர்வகிக்கும் அதே வேளையில் பல்கலைக்கழக அமைப்பின் வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டதுடன், மருத்துவ பீடங்கள், பொறியியல் பீடங்கள் மற்றும் விஞ்ஞான பீடங்களின் வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கினார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வுக் கொடுப்பனவை மீண்டும் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

நாட்டின் பல்கலைக்கழகக் கல்வி தொடர்பான முடிவெடுப்பதிலும் கல்விச் சீர்திருத்தங்களிலும் நவீன உலகிற்கு ஏற்றவாறு முறையான ஆலோசனைகளைப் பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஷாம் பன்னேஹக்க, பல்கலைக்கழக அமைப்பில் உள்ள வெற்றிடங்களை உடனடியாக தீர்த்து ஹுனு பல்கலைக்கழக பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதி இணங்கியதாக தெரிவித்தார்.

வரிப்பிரச்சினையால் விரிவு​ரையாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும், இதற்கான நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது திருத்தத்திலேயே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, நிதியமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

 

Exit mobile version