Home Hit அரயாசனம் ஏறுகின்றார் பைடன்

அரயாசனம் ஏறுகின்றார் பைடன்

95
0

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார்
அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

பதவியேற்பு விழாவுக்காக பைடன் தனது சொந்த நகரமான டெலாவெயரில் இருந்து வொசின்டன் மாளிகைக்கு கண்ணீருடன் புறப்பட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய பைடன் தன்னை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

அத்துடன் ‘அனைத்தும் சாத்தியம்’ என்ற நம்பிக்கையுடன் வொசின்டனை நோக்கி செல்வதாகவும் பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவானார்.

அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதியே பதவி ஏற்பது வழக்கம்.

பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் இருக்கும்.

அதுவும் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் தலைநகர் வொசிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக வொஸிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வொசிங்டன் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா முதல்முறையாக பதவியேற்கும்போது 20 இலட்சம் பேர் வருகை தந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்தமுறை கொரோனா தொற்று காரணமாக கொண்டாட்டங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்க மக்கள் பதவியேற்பு விழாவை காண தலைநகருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என ஜோ பைடன் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் கடந்த ஆறாம் திகதி நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகு வொசிங்டன் அதிகாரிகளும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அமைதியாக நடைபெறும் பதவியேற்பு விழாவின் பாரம்பரிய வழக்கமான இராணுவ தளபதி படைகளை பார்வையிடுதல் நிகழ்ச்சி இந்த முறையும் நடைபெறும்.

ஆனால் வழக்கமாக நடைபெறும் இராணுவ அணிவகுப்பு, இணைய அணிவகுப்பாக அமெரிக்கா முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டையும் போல இந்த ஆண்டும் நட்சத்திர விருந்தினர் நிகழ்ச்சி நடைபெறும்.

ஜோ பைடனின் ஆதரவாளரான அமெரிக்க பாடகி லேடி காகா தேசிய கீதம் பாடுவார்.

நடிகை ஜெனிபர் லோபசின் பாடல் நிகழ்ச்சியும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கான நேரப்படி காலை 11.30 மணியளவில் அதாவது இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்வு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் 12 மணியளவில் ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக் கொள்வார்கள் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

அதேபோல் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு அமெரிக்க உயர் நீதிமன்ற பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here