பல மாதங்களுக்கு பின்னர் ஜெர்மனியில் இருந்து சொந்த நாட்டு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி விமான நிலையத்தில் வைத்து நேற்று (18) கைது செய்யப்பட்டார்.
ரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நவல்னிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் ஜெர்மனியின் பெர்லினில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவரின் உடலுக்குள் கொடிய விசத்தன்மை உடைய நோவிசோக் என்ற நஞ்சுத்தன்மையான திரவம் செலுத்தப்பட்டதாக ஜெர்மன் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டு நேற்று மொஸ்கோவிற்கு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நவல்னி உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கு அவரை 30 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நவல்னி மாஸ்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நவல்னி…
‘இது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயல்’ மேலும், தனது ஆதரவாளர்கள் ரஸ்ய வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என நவல்னி அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, நவல்னி சிறையில் அடைக்கப்பட்டதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஐ.நா மனித உரிமை அமைப்பு, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகள் நவல்னியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ரஸ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.